Sunday, January 10, 2010

துப்பாக்கி சூடு காணொளி அசலானது - ஐ.நா



 இலங்கையின் அரச படையினர் போன்ற சீருடை அணிந்தவர்கள், கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட சிலரை சுட்டுக்கொல்வதுபோல சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த காணொளி காட்சி உண்மையானவைதான் என ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் என்னும் அமைப்பினாலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் காட்சி முதலில் அனைவருக்கும் அனுப்பட்டிருந்தது.ஆரம்பம் முதலே இலங்கை அரசாங்கத் தரப்பினர் இந்த வீடியோ போலியானது என்று கூறிவருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்த ஐ.நா.வின் சிறப்பு நிபுணர்கள், இந்த வீடியோ குறித்த அனைத்து சந்தேகங்களையும் களைந்துவிட்டதாக சட்டத்துக்கு புறம்பான, எதேச்சதிகார மற்றும் விசாரணையற்ற கொலைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் இந்த வீடியோ குறித்து ஆராயுமாறு நியமிக்கப்பட்ட குழுவின் முடிவுகளில் குறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டனவா என்பது குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார்.

Saturday, January 9, 2010

தமிழர் தின வாழ்துகள்



தமிழர் தினத்தையும் தமிழர் வருட பிறப்பையும் உலக தமிழர்கள்  அனைவரும் வெகு சிறப்பாக கொண்டாடுவோம்

உலக பொதுமறை திருக்குறள்

தமிழ் விளக்கவுரையுடன்  கூடிய கோப்பினை பதிவிறக்கம் செய்ய
 http://www.esnips.com/web/tamilzh

Monday, January 4, 2010

தமிழ்பெயர்கள்

தமிழ் குழந்தைக்கான தமிழ் பெயர்களை கீழ்கண்ட தொடர்பிலிருந்து பெற்று கொள்ளலாம்
http://www.esnips.com/web/tamilzh

Friday, January 1, 2010

2009ம் ஆண்டில் இலங்கை: முக்கிய நிகழ்வுகள்

2009ம் ஆண்டில் இலங்கை: முக்கிய நிகழ்வுகள்

ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாக மாறிப் போனது 2009. நினைத்துப் பார்க்க முடியாத மனிதப் பேரவலத்தை சந்தித்துள்ளனர் ஈழத் தமிழர்கள்.தங்களுக்காக போராடி வந்த விடுதலைப் புலிகள் வேரோடு வீழ்த்தப்பட்ட அதிர்ச்சி ஒருபக்கம், அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட எதிரியின் கையை நம்பியிருக்கும் அவலம் மறுபக்கம்.இருக்க வீடில்லை, உடுத்த உடையில்லை, சாப்பிட வழியில்லை, சொந்த ஊருக்குப் போக வாய்ப்பில்லை என்று பேரவலத்திற்கு மத்தியில் வாழும் ஈழ மக்கள் தங்கள் கடைசி மூச்சு வரை மறக்கவே முடியாத அளவுக்கு இந்த 2009ம் ஆண்டு அவர்களுக்கு பெருத்த இழப்பையும், சோகத்தையும் வாரிக் கொடுத்து விட்டது.விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையிலான போர் இறுதியாக முடிந்ததாக கூறப்படும் இந்த ஆண்டில் இலங்கையிலும், அதுதொடர்பாக உலக நாடுகளிலும் நடந்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு...
ஜனவரி
1- பரந்தன் முகாமை பிடித்ததாக இலங்கை அறிவித்தது.

2 - புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

3 -முல்லைத்தீவில் சரமாரியாக குண்டுகளை வீசி அப்பாவித் தமிழர்களைக் கொல்வதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர்.

5 - யானையிறவு பிடிபட்டது.

8 - சிங்களப் பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரமசிங்கே படுகொலை செய்யப்பட்டார். ராஜபக்சே அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.

22 - முல்லைத்தீவின் மையப் பகுதி வீழ்ந்ததாக ராணுவம் அறிவித்தது.

23 - இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார்.

24 - கல்மடுக்குளம் அணைக்கட்டை விடுதலைப் புலிகள் குண்டு வைத்துத் தகர்த்தனர். இதில் 1500க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

25 - முல்லைத்தீவு துறைமுகம் பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டது.

27 - கொழும்பு சென்ற பிரணாப் முகர்ஜி, ராஜபக்சேவுடன் போர் நிறுத்தம் குறித்து விவாதித்தார் என்று இந்திய அரசு தெரிவித்தது.

29 - இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இந்தியா தலையிட்டு அப்பாவித் தமிழர்களைக் காக்கக் கோரியும் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிப்ரவரி

1 - இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி லண்டனில் ஒரு லட்சம் தமிழர்கள் பிரமாண்டப் பேரணி நடத்தி இங்கிலாந்துப் பிரதமரிடம் மனு அளித்தனர்.

3- சுரந்தாபுரம் என்ற இடத்தில் நடந்த ராணுவ தாக்குதலில் 52 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

4 - இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் ஸ்தம்பித்தது.

8 - இலங்கையில் போரை நிறுத்தக் கோரி மலேசியாவில் ஈழத் தமிழர் ராஜா தீக்குளித்து உயிர் நீத்தார்.- சென்னை வண்ணாரப்பேட்டையில் அமரசேன் என்பவர் ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்தார்.

12 - தமிழ்ப் பத்திரிக்கையாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.

14 - ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு முருகதாசன் என்ற தமிழ் வாலிபர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார்.

18 - போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கையை வற்புறுத்த முடியாது என்று இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

20 - கொழும்பில் விடுதலைப் புலிகளின் 2 ஹெலிகாப்டர்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் அதில் இருந்த இரு கரும்புலிகளும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டன.

21 - ராணுவமும், விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.- மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது சென்னை தரமணியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் தீக்குளித்தார்.

22 - தீக்குளித்த சிவப்பிரகாசம் உயிரிழந்தார்.

25 - இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிவகாசியைச் சேர்ந்த திமுக தொண்டர் கோகுல ரத்தினம் தீக்குளித்து உயிர் நீத்தார்.

மார்ச்

9 - ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்காக 25 டன் மருந்துப் பொருட்களுடன், இந்திய மருத்துவக் குழு இலங்கை சென்றது.

10 - இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல்

1 - இலங்கை ராணுவத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

2-5- புதுக்குடியிருப்பி்ல் நடந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர்.

9 - இலங்கையில் போரை நிறுத்தக் கோரி சென்னையில் திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. கருணாநிதி தொடங்கி வைத்தார்.

12 - போர் முனையில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் வெளியேறுவதற்கு வசதியாக 2 நாள் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தார் ராஜபக்சே.

20 - இலங்கை ராணுவம் நடத்திய பயங்கர குண்டு வீச்சில் 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒரே நாளில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.- பிரபாகரன் 24 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் என ராஜபக்சே எச்சரிக்கை விடுத்தார்.

23 - இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.

26 - போர் நிறுத்தம் செய்வதாக விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்தது.

27 - இலங்கையில் போரை நிறுத்தக் கோரி முதல்வர் கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் போய் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவர் விடுத்த போர் நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அதிபர் ஏற்றுக் கொண்டதாக கூறி சில மணி நேரங்களில் போராட்டத்தை அவர் முடித்துக் கொண்டார்.

மே
12 - முள்ளிவாய்க்காலில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை விமானப்படை நடத்திய கொத்து வெடிகுண்டுத் தாக்குதலில் 49 நோயாளிகள் உயிரிழந்தனர்.

14 - தமிழர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

18 - 30 ஆண்டுகளாக நீடித்து வந்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அது கூறியது.

19 - நந்திக் கடல் லகூன் பகுதியில் பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாக கூறி உடலையும் காட்டியது இலங்கை ராணுவம். அந்த உடல் பிரபாகரனுடையது இல்லை என்று சர்ச்சை கிளம்பியது.

23 - பிரபாகரனின் உடலை எரித்து கடலில் சாம்பலை வீசி விட்டதாக ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்தார்.

ஆகஸ்ட்

26 - கைகளை பின்புறமாக கட்டிய நிலையில் தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் கோரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை இங்கிலாந்து டிவி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்டோபர்

10 - தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களைப் பார்வையிட டி.ஆர்.பாலு தலைமையில் திமுக- காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் குழு இலங்கை சென்றது.

22 - தமிழக குழுவினர் வந்து சென்ற பின்னர் ஒரே நாளில் 42,000 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை கூறியதாக டி.ஆர்.பாலு அறிக்கை விட்டார்.

நவம்பர்12 - இலங்கை முப்படைக் கூட்டுத் தலைவர் சரத் பொன்சேகா ராஜினாமா செய்தார். அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு.

டிசம்பர்12 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தியை அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு கூறியது.

13 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் பா.நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது கோத்தபாய அவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் என பொன்சேகா தெரிவித்தார்.

14- பாரீஸில் நடந்த கருத்துக் கணிப்பில் 99 சதவீத தமிழர்கள் தமிழ் ஈழமே தீர்வு என வாக்களித்தனர்.

17 - ராஜபக்சே, பொன்சேகா, சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் அதிபர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.- ஓசியானிக் வைகிங் கப்பலில் உள்ள
78 தமிழர்களும் உண்மையான அகதிகள் என ஐ.நா. அகதிகள் ஆணையம் அங்கீகரித்தது.

19 - கொழும்பு சென்ற இந்திப் பாடகி ஆஷா போஸ்லே, அதிபர் ராஜபக்சேவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்திப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.- முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழ்ப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், கைதிகள் பலரை பல மணிநேரம் வெயிலில் முட்டிபோட வைத்ததாகவும் முகாமிலிருந்து விடுபட்டு லண்டன் திரும்பிய டாக்டர் வாணி குமார் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

20 - ஓசியானிக் வைகிங் கப்பலில் அடைபட்டுக் கிடந்த 78 தமிழர்களில் 15 பேர் அதிலிருந்து இறங்கி ஆஸ்திரேலியாவுக்கும், ருமேனியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.

21 - விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் அவர்களுடைய குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கையிடம் விளக்கம் கேட்டது ஐ.நா.

26 - இலங்கை தமிழ எம்.பி. சிவாஜிலிங்கம் தமிழகத்திற்கு வந்தபோது அவரை உள்ளே நுழைய அனுமதிக்காமல் அதிகாரிகள் நாடு கடத்தினர்.

27 - தமிழர்களின் இன்றைய நிலைக்கு விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முடிவுகளும், அணுகுமுறைகளும்தான் காரணம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் திடீரென புகார் கூறினார்.

30 - சன்டே லீடர் பத்திரிக்கை மீது ரூ. 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு பொன்சேகாவும், ரூ. 100 கோடி கேட்டு கோத்தபயாவும் வழக்கு தொடர்ந்தனர்.