Wednesday, September 22, 2010

பெரியார் புரட்சியின் விளைவு?


1. 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “ பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள்.

சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு!

இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்தபோதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல்.

1926 க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?

3. பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4. 1933 -இல் அன்னை நாகம்மையார் மறைந்த-அடுத்த நாளே தடையை மீறி, ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்து தந்தைபெரியார் ஒரு மாதகாலம் சிறை புகுந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5. 1933 அக்டோபரில் “குடிஅரசில்” தந்தைபெரியாரால் எழுதப்பட்ட “இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?” என்ற கட்டுரையில் தீவிர பொதுவுடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப் பட்டு இ.பி.கோ. 124 ஏ பிரிவின்படி ராஜதுவேஷம் குற்றம் சுமத்தப் பட்டு, கட்டுரை ஆசிரியர் தந்தைபெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை) பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

6. 1938-இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அய்யாவுக்கு அளிக்கப்பட்ட பட்டம் தான் புபெரியார்” என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. 1960 வாக்கில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட “ சோதனைக் குழாய் குழந்தை” பற்றி 1938-லேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

8. 1942 ஆம் ஆண்டு கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியதும், அதை தந்தைபெரியார் ஏற்க மறுத்து, பதவியை துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?

9. 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ 1 இலட்சம் நன்கொடை தந்தபோது-தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?

10. 1951-இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன் முதல் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

11. பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்ற வர்கள் அடக்கம் செய்யப்பட்ட தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் சூத்திரர்கள் இடம் என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954 இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

12. 1954 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் தந்தைபெரியாரின் ராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டத்துக்கு – அங்கே போலீஸ் அதிகாரியின் வீடு இருப்பதால் காவல் துறை அனுமதி மறுத்தது என்பதும், தந்தை பெரியார் ஒலி பெருக்கியில்லாமலேயே மாபெரும் கூட்டத்தில் 2 மணிநேரம் உரக்கப் பேசினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

13. வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

14. வைக்கம் போராட்டம் வெற்றி பெறும் நிலையில் அந்தப்புகழ் தந்தை பெரியாருக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதால் தான் கடைசி நேரத்தில் இதில் காந்தியார் நுழைக்கப்பட்டார் என்ற சூழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?

15. தந்தை பெரியார் தலைமையில் வைக்கம் போராட்டம் நடந்த போது போராட்ட வீரர்களுக்கு உணவு வழங்கியவர்கள் சீக்கியர்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

16. தந்தை பெரியாருக்கு வரவேண்டிய கடன் தொகைகளை ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட தந்தைபெரியார் கோர்ட் மூலம் வசூலிக்க மறுத்தார் என்பதும், அதைத் தமக்கு மாற்றித் தருமாறு சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பார்ப்பன வழக்கறிஞர் கோரிக்கையை பெரியார் புறக்கணித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

17. தந்தை பெரியார் காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது- பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி காங்கிரசில் வலுத்துவிட்டது என்று கூறி, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு- காங்கிரசிலிருந்து முக்கியப் பார்ப்பனத்தலைவர்கள் விலகினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

18. குருகுலப் பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது- பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று காங்கிரஸ் கமிட்டியில் தந்தை பெரியார் கொண்டுவந்த தீர்மானத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ஆச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

19. தமிழ்நாடு கதர்போடின் தலைவராக தந்தைபெரியார் இருந்த போது செயலாளராக இருந்த கே.சந்தானம் என்ற பார்ப்பனர், தன்னிச்சையாக பார்ப்பனர்களை ஏராளமாக வேலைக்கமர்த்தியதையும், அதைத் தந்தைபெரியார் கண்டித்ததும் உங்களுக்குத் தெரியுமா?

20. ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன் முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழி பெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச்செய்தி உங்களுக்குத் தெரியுமா?

21. 1921 இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அமுல்படுத்தியபோது- பார்ப்பனஅதிகாரிகளை “பிபூ என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை “எஸ்.பி” என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டு -பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் சாதிப் பட்டத்தை போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

22. 1921 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி-பெண்களுக்கு முதன்முதலாக ஓட்டுரிமை வழங்கியது நீதிக்கட்சிதான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

23. வேலைவாய்ப்பில் மட்டுமன்றி, பதவி உயர்விலும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 1923 ஆம் ஆண்டிலேயே, நீதிக்கட்சி ஆணை பிறப்பித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

24. 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் தான் “ஸ்டாப் செலக்ஷன் போர்டு” ஏற்படுத்தப்பட்டு உத்தியோக நியமனங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டது; அதற்கு முன், அந்தந்த இலாகா மூலமாகவே -பார்ப்பனர்கள் ஏராளமாக வேலைக்கு நியமிக்கப்பட்டு வந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

25. 1936 ஆம் ஆண்டு நீதிக்கட்சி இனாம்தாரர்கள் கொட்டத்தை அடக்க மசோதா கொண்டுவந்தபோது- அதை நாத்திகர் சட்டம் என்று கூறி பார்ப்பனர்கள் எதிர்த்தனர் என்பதும், கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுத்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

26. நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும என்று இருந்த நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இதன் பொருள் என்ன? பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டர்களாகவேண்டும் என்பது தானே!

27. தேவதாசிகள் ஒழிப்பு மசோதா, விபச்சார ஒழிப்பு மசோதாக் களை கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

28. மறவர் சமூகத்தினர் அன்றாடம் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று குற்றப் பரம்பரை பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அவலத்தை ஒழித்தது நீதிக்கட்சிதான்

என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

29. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை- முதன் முதலாக அமைச்சர் பதவியிலமர்த்தியது நீதிக்கட்சி தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

30. ஆதிதிராவிடர்(பஞ்சமர்) பொதுத் தெருவிலும் சகலமான சாலை களிலும் நடந்து போகலாம் என்று முதன் முதலில் அதற்கென்றே தனித்த ஆணையைப் பிறப்பித்தது நீதிக்கட்சி ஆட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

31. தொழிற்சங்கத் தலைவராக இருந்த திரு.வி.க.வை நாடு கடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி வற்புறுத்தியபோது, அன்றைய நீதிக்கட்சி அதை ஏற்க மறுத்ததோடு, திரு.வி.கவை நாடு கடத்தினால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அறிவித்த வரலாறு

உங்களுக்குத் தெரியுமா?

32. மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, மற்ற எல்லோரையும் விட 1916 ஆம் ஆண்டிலே ரூ 10,000 நன்கொடை வழங்கிய-நீதிக் கட்சித் தலைவர் தியாகராயருக்கு விழா மேடையிலே உட்காரப் பார்ப்பனர்கள் அனுமதிக்கவில்லை! அதே நேரத்தில் தியாக ராயரின் பார்ப்பன கிளர்க்குகளுக்குக் கூட அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது!

இந்த அவமானத்தைக் கண்டு கொதித்தெழுந்த தியாகராயர், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பில் மிகத் தீவிரவாதியாக மாறினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

33. நீதிக்கட்சித் தலைவர்-சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் தான் முதன் முதலாகப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்று உண்மை உங்களுக்குத் தெரியுமா?

34. நீதிக்கட்சித் தலைவர் சர்பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாநகர முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால கட்டத்தில்தான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்கார மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டன

என்ற வரலாற்றுச் செய்திகள் உங்களுக்குத் தெரியுமா?

35. மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை, சட்டம் ஆவதற்கு முன், நீதிக்கட்சித் தலைவரான டாக்டர் நாயர் 1918 ஆம் ஆண்டு லண்டனுக்குத் தாழ்த்தப்பட்டோருக்கும், பார்ப்பனரல் லாதாருக்கும் சட்டமன்றத்தில் ஒதுக்கீடு தேவை என்று வற்புறுத்தச் சென்றபோது, இங்கிலாந்து அரசாங்கம் அவர் கருத்துத் தெரிவிக்கத் தடைபோட்டதும், தளர்ச்சி அடையாமல் டாக்டர் நாயர், தனித்தனியாக ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்துத் தடையை நீக்கச் செய்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் சென்னை திரும்பினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

36. பார்ப்பனர்களுக்காக “ ஹோம்ரூல்” இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மை யாரின் வண்டவாளங்களை 1918 இல் நீதிக்கட்சித் தலைவரான நாயர் அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரை-அந்த அம்மையாருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது.

அதற்காக பாரிஸ்டர் வழக்கறிஞர்களைக் கொண்டு அந்த அம்மையார்-டாக்டர் நாயர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்! டாக்டர் நாயர்-வழக்கறிஞர் யாரும் இல்லாமல் தானாகவே ஆஜராகி அந்த வழக்கில் வென்றார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

37. நீதிக்கட்சித் தலைவரான டாக்டர் நாயர் உடல் நலமின்றி லண்டனுக்கு சிகிச்சைக்கு சென்றபோது- அவர் மரணமடையவேண்டும் என்று பார்ப்பனர்கள் விசேஷ அர்ச்சனை செய்தார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

38. பார்ப்பனரல்லாதார் நலனுக்காக வாதாட லண்டன் சென்ற உடல்நலமில்லாத டாக்டர் நாயர் அங்கேயே மரணமடைந்தார் என்பதும், அப்போது லண்டனிலே இருந்த தமிழகக் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இறந்தவருக்கு மரியாதை தெரிவிக்கக்கூட செல்லவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

39. கோயில் பார்ப்பனர்களின் குடும்பச் சொத்தாகி கொள்ளை யடிக்கப்பட்டு வந்து நிலைமையை மாற்றி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1925 இல் நீதிக்கட்சி ஆட்சிதான், முதலமைச்சர் பனகல் அரசரின் பெருமுயற்சியால் இந்து அறநிலையத் துறையையே

உருவாக்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

40. இந்தியாவிலேயே – தாழ்த்தப்பட்டோருக்கான முதல் அமைச் சகத்தை பனகல் அரசர் தான் நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் உருவாக்கினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

41. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் (முதலியார்) அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்திரி அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 300 ஆகவும் இருந்த கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் எழுத அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்திரவு பிறப்பித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

42. 1916 ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூத்த தலைவரான டாக்டர் நடேசனார் அவர்கள்- திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் “திராவிடர் இல்லம்” என்று பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஒருவிடுதியைத் துவங்கினார்!

ஏன் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதுமிருந்து சென்னைக்குப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அப்போது தங்குவதற்கு விடுதிகள் இல்லை; பார்ப்பனர்களே ஓட்டல்களை நடத்தியதால் அவர்கள் அங்கே உணவருந்த அனுமதிக்கப்படவில்லை!

1916 ஆம் ஆண்டு வாக்கில் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படித்தான் இருந்தது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

43. 1923-இல் நீதித்துறை முழுவதும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்ததை எதிர்த்து- அந்தத் துறைக்கு மான்யமே கொடுக்கக் கூடாது!

என்று சட்டசபையில் துணிச்சலாக முழக்கமிட்டவர் டாக்டர் நடேசனார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?

44. தாழ்த்தப்பட்ட சகோதரர்களை பு பறையன்” என்றே அரசு ரிக்கார்டுகளில் குறித்து வந்ததை எதிர்த்து “ஆதிதிராவிடர்”என்றே குறிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, பிறகு அதை அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர். சி. நடேசனார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

45. இன்று பதவிநியமனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள “பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” பார்ப்பனர்களின் எதிர்ப்பை மீறி நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் நடேசனாரின் சலியாத உழைப்பால் உருவெடுத்தது என்று வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

46. ஒரத்தநாடு, ராஜாமடம் போன்ற இடங்களில் இருந்த தர்ம சத்திரங்களில்- பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற முறையை மாற்றியவர் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக இருந்த சர்.ஏ.டி பன்னீர்செல்வம் தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

47. நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்கள் – ராமாயணத்தில் பார்ப்பனச் சூழ்ச்சியை நாடகத்தின் மூலம் தோலுரித்துக் காட்டியதால் தான் 1954 – இல் நாடகக் கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றையே அரசு கொண்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

48. 1935 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதியதோடு டிக்கட்களிலும் அவ்வாறு அச்சிட்டார்கள் என்பதும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக்குழு தலைவராக இருந்த ர.ட.அ சவுந்தர பாண்டியன் தான் அதை ஒழித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

49. முகவை மாவட்ட ஆதிதிராவிடர் மாநாட்டை, சிவகங்கையில் முதன்முதலாக ஏற்பாடு செய்து நடத்தியவர்-சுயமரியாதை வீரர்- ராமச்சந்திரன்(சேர்வை) என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

50. சுயமரியாதை வீரர் ராமச்சந்திரன்(சேர்வை) ஆதிதிராவிடர் கூட்டங்களுக்கு சாதி வெறியர்களின் எதிர்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு, கையில் துப்பாக்கியுடன் வந்து கலந்து கொண்டவர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

51. இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன்” என்று பொதுமேடையிலே அறிவித்தவர் தான், அறங்காவலர்குழு, தாலுகா போர்டு தலைவராக இருந்த எஸ். ராமச்சந்திரன் (சேர்வை) என்பது உங்களுக்குத் தெரியுமா?

52. சிவகங்கை சுயமரியாதை வீரரான ராமச்சந்திரனாரை காங்கிரசில் சேருமாறு, சத்தியமூர்த்தி(அய்யர்) வலியுறுத்தியபோது நீங்கள் பூணூலை அகற்றினால் காங்கிரசில் சேருகிறேன் என்று முகத்திலடித் தாற்போல் அவர் பதில் தந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?